பிரேஸிலின் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா மற்றும் அவரது சில அரசாங்க அமைச்சர்களுக்கு பொதுவெளியில் முகக்கவசம் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாவோ பாலோவில் நடந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா, மூன்று அமைச்சர்கள் மற்றும் ஆறு பிரதிநிதிகளுக்கு சாவோ பாலோ மாநில அதிகாரிகள் தலா 110 டொலர்கள் (75 யூரோக்கள்) அபராதம் விதித்தனர்.
12,000 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் கலந்துக்கொண்ட இந்த பேரணியில், சில பதாகைகள் இராணுவத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தன.
இது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா ஆற்றிய உரையில், கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக கூறினார்.
இதன்போது தலைக்கவசம் அணிந்த ஆனால் பெரும்பாலும் முகக்கவசம் இல்லாத இருசக்கர வாகன ஓட்டிகள் அவர் பேசும்போது ஆரவாரம் செய்து கோஷமிட்டனர்.
ஏற்கனவே கொவிட் தடுப்பூசி பெற்றவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று கூறி மருத்துவ ஆலோசனையுடன் அவர் முரண்பட்டார்.
பிரேஸிலியர்களில் 12 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.