எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவையும் கோரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சரே பொறுப்பு என குற்றம் சாட்டி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் ஆதரவும் கோரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு கம்மன்பிலவை பகிரங்கமாக குற்றம் சாட்டியவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் ஒருவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் எரிபொருள் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததாக கம்மன்பில தெரிவித்திருந்தார்.
அத்தோடு, எரிபொருள் விலை உயர்வு என்பது நிதி அமைச்சரின் கீழ் வரும் ஒரு விடயம் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.