பிரெக்ஸிற்க்குப் பின்னரான சுதந்திர வர்த்தக ஒப்பந்ததிற்கு பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, காலநிலை மாற்றம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை கட்டியெழுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவுடன் செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் பிரித்தானியா முன்னெடுக்கும் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு இடையிலான உறவில் புதிய மலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்வதற்கான வாய்ப்பு இந்த ஒப்பந்தம் மூலம் தமது நாட்டுக்குக் கிட்டியுள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஜப்பான் மற்றும் நோர்வேயுடனும் பிரித்தானியா ஒப்பந்தங்களை மேற்கொண்டது, ஆனால் அவை ஐரோப்பிய ஒன்றியத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.