மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில், முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த 10பேரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் நேற்று முன்தினம் (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
ஆனாலும் அவர் உட்பட 10 பேர், நீதிமன்ற தடை உத்தரவை மீறி நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, அஞ்சலி செலுத்தி அதனை முகநூலிலும் பதிவேற்றி இருந்தனர்.
குறித்த சம்பவம் அறிந்த பொலிஸார், அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் , சட்டத்தரணி சுகாஸ் முன்னிலையாகி இருந்தார். ஆனாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாதமையினால், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான், உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.