தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
13பேர் கொண்ட இந்த அணியில், வேகப்பந்து வீச்சாளரான டேரன் பிராவோ மற்றும் இடது கை துடுப்பாட்ட வீரரான டேரன் பிராவோ ஆகியோர் புதிதாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் முதல் டெஸ்டின் போது விளையாடிய நக்ருமா போன்னர், இப்போட்டியில் இடம்பெறவில்லை என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கிரெய்க் பிராத்வைட் தலைமையிலான அணியில், ஜெர்மைன் பிளாக்வுட், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷெனோன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், கீரன் பவல், கெமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது.
தற்போது இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது.
இதில் முதலாவதாக சென்.லுசியாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இப்போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 97 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 162 ஓட்டகளையும் பெற்றுக்கொண்டன.
அதிகப்பட்ச ஓட்டங்களாக ரோஸ்டன் சேஸ் 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். வேறு எந்த வீரரும் இரு இன்னிங்ஸ்களிலும் 20 ஓட்டங்கள் கூட கடக்கவில்லை.
இந்தநிலையில் தீர்க்கமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் தென்னாபிரிக்கா அணியும் தொடரை சமநிலைப்படுத்தும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணியும் களமிறங்கவுள்ளன.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இன்று சென். லுசியாவில் ஆரம்பமாகவுள்ளது.