நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நாளை முதல் விலக்கப்படவுள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை ஐந்தாம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய குறித்த சுகாதார வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பேருந்தில் 50 வீதமானோர் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மேல் மாகாணத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும்.
அத்துடன், அனைத்து மாகாணங்களிலும் ஒரு வீட்டிலிருந்து இருவர் மாத்திரம் வெளியில் சென்றுவர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் அல்லது வாடகை வாகனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் இருவர் மாத்திரமே பயணிக்க வேண்டும்.
இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்குத் தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை அமைர்த்துவதற்கு அந்த நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானிக்க வேண்டும்.
அத்துடன், குறித்த நிறுவனங்கள் வீடுகளில் இருந்து சேவையாற்றக் கூடிய வகையிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நிறுவனம் சார் கூட்டங்களில் பத்துப் பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும் என்பதுடன் மேல் மாகாணத்தில் இதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அத்துடன், மேல் மாகாணம் தவிர ஏனைய பகுதிகளில் 25 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்தில் இதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இதனைவிட, மொத்த விற்பனைகளுக்காக பொருளாதார மத்திய நிலையங்ளைத் திறப்பதற்கு அனுமதிக்கப்படுவதுடன் கடும் கட்டுப்பாடுகளுடன் வாராந்த சந்தைகளையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், பதிவுசெய்யப்பட்ட நடமாடும் வர்த்தகர்கள், பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.