நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்றாலும் பலரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த முடிவை எடுத்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவுகிறது, இறப்புகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ள காரணத்தினால், தங்கள் குரல் நாடாளுமன்றத்தின் மூலம் கேட்க வேண்டும் என்பதை தான் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.
ஒரு குறுகிய காலத்தில் ஒரு அரசாங்கம் இவ்வளவு மக்களின் வெறுப்பிற்கு ஆளாவார்கள் என தான் எண்ணவில்லை அத்தகைய சூழ்நிலையில் ஒரு நாடு எவ்வாறு முன்னேற முடியும் என பலர் கேள்வியெழுப்புவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்றைய நிலைமை அரசியல் மற்றும் நிர்வாகம் இரண்டுமே குழப்பத்தில் உள்ளதாகவும் இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை எடுத்துக்கொண்டால் தேசத்திற்கான சேவையை மேற்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.