கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரைதீவு மாவடிப்பள்ளியை சேர்ந்த ஒருவரும், சாய்ந்தமருதை சேர்ந்த ஒருவரும் என இரு நோயாளிகள் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதன்காரணமாக கொரோனா தொற்று காரணமாக இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். 274 கொரோனா தொற்றாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 37 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும்.
உயிரிழப்புக்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டுமாக இருந்தால் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடிப்பது அவசியமாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.