மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு தெரிவிக்கையில், ‘கடலூர் மற்றும் கன்னியாகுமரி துறைமுகங்களில் சாகர்மாலா உள்நாட்டு கப்பல் போக்குவரத்து திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகளையும், நிதி ஆதாரத்தையும் மத்திய அரசு வழங்கியதற்கு நன்றி.
தமிழக மக்களின் கனவு திட்டமான சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம், தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு மாற்று முனையாக மாற்றும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே, இந்திய துறைமுகங்கள் சட்டப்படி, நாட்டில் உள்ள சிறிய துறைமுகங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.
மத்திய அரசின் புதிய சட்டத்தால், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மொத்தமாக நீர்த்து போகக் கூடியதாக உள்ளன. எனவே இந்த புதிய திருத்த சட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறது’ எனத் தெரிவித்தார்.