நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யவும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநில பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (வியாகழக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
நாடு தழுவிய அளவில் தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்த ஆண்டு இறுதிக்குள் 75 வீத மக்கள் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தயக்கத்தை களையவும், தடுப்பு மருந்துகள் வீணாவதை குறைக்கவும் நம் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் உருவாகும் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.