ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை பிரசுரிக்கும் பத்திரிகையான ‘அப்பிள் டெய்லியின்’ கடைசி பதிப்பை படமெடுக்க, ஆயிரக்கணக்கானோர் ஹொங்கொங் நகரில் குவிந்தனர்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை நிறுத்திக் கொள்வதாக புதன்கிழமை அறிவித்த அப்பிள் டெய்லி நிறுவனம், நேற்று ‘மழையில் கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்த ஹொங்கொங் மக்கள்’ என்கிற தலைப்பில் தன் வாசகர்களுக்கு நன்றி கூறியது.
இதன் கடைசி பிரதிகள் நேற்று வெளியான நிலையில், அவற்றின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் கடந்தது.
தன் சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில், கொட்டும் மழையில் அப்பத்திரிகையை ஆதரிக்கும் வாசகர்கள், அப்பிள் டெய்லி அலுவலகத்தின் முன் குவிந்து, தங்கள் கையடக்க தொலைப்பேசிகளில் உள்ள டோர்ச் லைட்டை ஒளிரச் செய்து தங்கள் ஆதரவையும், அன்பையும் வெளிப்படுத்தினர்.
இப்பத்திரிகையில் வெளியான சில செய்திகள் ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு, நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு முதல் இப்பத்திரிகை பிரசுரித்த சுமார் 30 கட்டுரைகளில், ஹொங்கொங் மற்றும் சீனா மீது தடை விதிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.