எதிர்கால அச்சுறுத்தல்களை உரிய நேரத்தில் கவனமுடனும், வலுவாகவும் எதிர்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு உறுப்பு நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான காணொலி வழி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் எதிர்கொண்ட பாதிப்பு, அவற்றின் உருமாறிய தீநுண்மி தாக்குதல்களால் மேலும் அதிகரித்துள்ளது.
இந்தப் பாதிப்பை திறம்பட எதிர்கொள்ள உலக நாடுகளிடையே சுகாதாரம் சார்ந்த மிகப் பெரிய அளவிலான ஒத்துழைப்பு அவசியம்.
கொரோனா தொற்றின் இப்போதைய பாதிப்பை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளையும், எதிர்காலப் பாதிப்புகளையும் திறம்பட எதிர்கொள்வதற்கான நீண்டகாலத் திட்டத்தை வகுப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
சர்வதேச சுகாதாரத் துறையில் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பை உறுதி செய்வதில் உலக சுகாதார அமைப்பின் கீழ் செயல்படும் பெருந்தொற்று தயார்நிலை மற்றும் தடுப்புக்கான குழு, ஆலோசனைக்குழு சர்வதேச சுகாதார வழிகாட்டுதல்கள் ஆய்வுக் குழு ஆகிய தனி அதிகாரம் படைத்த குழுக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.