இத்தாலிய தீவான லம்பேடுசாவிலிருந்து ஐந்து மைல் (எட்டு கிலோமீட்டர்) தொலைவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், கர்ப்பிணிப் பெண் உட்பட குறைந்தது 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை இந்த விபத்திற்குப் பிறகு சுமார் 10 பேரைக் காணவில்லை என்று இறப்புக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் குழுவின் தலைமை வழக்கறிஞர் லூய்கி பட்ரோனகியோ கூறினார்.
எட்டு மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் கவிழ்ந்த பின்னர், கடலோர காவல்படை பிரிவினர் சுமார் 46 பேரை மீட்டு, மீண்டும் லம்பேடுசாவுக்கு கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகதிகள் துனிசியாவில் தங்கள் பயணத்தைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது என்று சிசிலியன் நகரமான அக்ரிஜெண்டோவில் நீதவான்களுடன் பணிபுரியும் பேட்ரோனகியோ கூறினார்.
250க்கும் மேற்பட்ட மக்கள் நான்கு கப்பல்களில் ஒரே இரவில் சிறிய தீவில் இறங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் இத்தாலிக்கு வருகை குறைந்து கொண்டிருந்தது. ஆனால் இது 2021ஆம் ஆண்டு மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 20,000 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் வந்துள்ளனர். பலர் ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக புலம்பெயர்ந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 6,700ஆக இருந்ததாக உட்துறை அமைச்சக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.