மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான உள்நாட்டு விமான நிலையமாக உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
1958ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் துறையின் கீழ் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் பின்னர் இலங்கை விமானப்படைக்கு 1983இல் ஒப்படைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது (2012), விமான நிலையத்தின் ஓடுபாதை உருவாக்கப்பட்டு உள்நாட்டு விமான நிலையமாக இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்ட போதிலும், அது சர்வதேசத்திற்குரிய தரத்தில் உருவாக்கப்படவில்லை என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
உள்நாட்டு விமானங்களுக்காகக்கூட எந்த வளர்ச்சியும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், உள்நாட்டு விமானங்களை இயக்குவதற்கு முன்னர் அடிப்படை தேவைகளின் பட்டியலைத் தொகுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.