கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு அளவுகளை பெற்றவர்கள் கோடையில் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விபரங்கள் இம்மாதம் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜூலை 26ஆம் திகதிக்குள் முழு தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்படாமல் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க முடியுமா என கேட்கப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஜூலை 19ஆம் திகதி இங்கிலாந்து தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று நான் நம்புகின்றேன். ஆனால் சில கூடுதல் முன்னெச்சரிக்கைகள் இன்னும் தேவைப்படலாம்’ என கூறினார்.
மிகவும் பிரபலமான விடுமுறை இடங்கள் தற்போது செம்மஞ்சள் பட்டியலில் உள்ளன. அதாவது மக்கள் பிரித்தானியா திரும்பும்போது 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
பிரித்தானியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
எனினும், தடுப்பூசியை செலுத்தியதன் விளைவாக உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரை 80 சதவீத பேருக்கு முதல் அளவு போடப்பட்டுள்ளது. 60 சதவீத பேருக்கு இரண்டு அளவும் போடப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் மாறுபாடு காரணமாக பிரித்தானியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு தளர்வுகள் அறிவிப்பதை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.