ஆசிய நாடான இந்தோனேசியாவிற்கு 40 லட்சம் மொடர்னா கொவிட் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மொடர்னா கொவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான், இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெட்ரோ மார்சிடியை தொடர்பு கொண்டு பேசிய போது, விரைவில் இந்தோனேசியாவிற்கு 40 லட்சம் மொடர்னா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
உலகின் நான்காவது அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தோனேசியாவில், கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக 20,000 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகார்த்தா, ஜாவா பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை இந்தோனேசிய அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அங்குள்ள மொத்த மக்கள் தொகையான 27 கோடியில் 18 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.