யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2ஆம் நாளாக நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, யாழில் முதல் கட்டமாக கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆரம்பத்திலும் 49 ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் இவர்களுக்கான இரண்டாவது கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜூன் 28ஆம் திகதி முதல் ஜூலை 3ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் 46 ஆயிரத்து 648 பேர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் 2ஆவது கட்டமாக தடுப்பூசி வழங்குவதற்கு 50 ஆயிரம் சினோபாம் தடுப்பு மருந்துகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி முதல் 10ம் திகதி வரை இடம்பெறும்.
இதில் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்து நிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அத்துடன் முன்களப்பணியாளர்களாக உள்ள கர்ப்பிணிதாய்மார்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
அதேபோன்று தொழிற்சாலை பணியாளர்களுக்கும் ஏனைய முன்களப்பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.