நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சிட்னி யில் உள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றினால் அடுத்த வாரம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ்மாநிலத்தில் சனிக்கிழமையன்று 16 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
கடுமையான முடக்கம், விரைவாக தொடர்புகளை கண்டறிதல் மற்றும் கடுமையான சமூக விலகல் கட்டுப்பாடுகள் காரணமாக அவுஸ்ரேலியா, பல நாடுகளை விட கொரோனா வைரஸ் தொற்றுநோயை சிறப்பாக நிர்வகித்தது.
ஆனால் கடந்த சில வாரங்களாக டெல்டா மாறுபாடு அதிகரிப்பு காரணமாக கடந்த வாரம் மூன்று மாநில தலைநகரங்களும் முடக்க கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் குயின்ஸ்லாந்து மாநில தலைநகர் பிரிஸ்பேனில் அமுலில் இருந்த முடக்க கட்டுப்பாடுகள் நிறைவுக்கு வந்துள்ள அதேவேளை மேற்கு அவுஸ்ரேலியா மாநிலத்தின் தலைநகரான பெர்த்திலும் கட்டுப்பாடுகள் நிறைவுக்கு வந்துள்ளன.