ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் தாங்களே அளித்த செப்டம்பர் மாத கால கெடுவுக்குள் முழுவதாக வெளியேறிவிடாவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
தூதரகங்களையும், காபூல் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாக்க முக்கியமாக அமெரிக்கத் துருப்புகளைக் கொண்ட 1000 படையினர் மட்டும் கெடுவுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படும் பின்னணியில் தலிபனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
இதுதொடர்பாக தலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறுகையில், ‘சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள், தாங்களே அளித்த செப்டம்பர் மாத கெடுவுக்குள் முழுதாக வெளியேறிவிடவேண்டும். அதற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டுப் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள்.
காபூல் நகரை இராணுவ ரீதியாகப் பிடிப்பது தலிபான் கொள்கை அல்ல. டோஹா உடன்படிக்கைக்கு மாறாக அவர்கள் சில படையினரை விட்டுச் சென்றால் அதன் பிறகு எப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து எங்கள் தலைமை முடிவு செய்யும். தூதர்கள், தொண்டு நிறுவனங்களை தாலிபன் தாக்காது.
எனவே அவர்களுக்கென்று பாதுகாப்புப் படையினர் தேவையில்லை. நாங்கள் வெளிநாட்டுப் படையினருக்கு எதிரானவர்கள் மட்டுமே. வெளிநாட்டுத் தூதர்களுக்கோ, தொண்டு நிறுவனங்களுக்கோ எதிரி அல்ல’ என கூறினார்.
எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் போய்விடும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
‘செப்டம்பர் 11’ காலக்கெடு 2001ஆம் ஆண்டு அமெரிக்கா மீதான அல்-கொய்தா தாக்குதலின் ஆண்டு நிறைவாகும். இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 3,000பேர் உயிரிழந்தனர். இதுவே ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பைத் தூண்டியது.