சுவீடனில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் ஒரேப்ரோ நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விமானத்தில் விமானியை தவிர எஞ்சிய அனைவரும் ஸ்கைடைவிங் எனப்படும் சாகச விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் ஆவர்.
விமானம் ஒரோப்ரோ விமான நிலையம் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் தரையில் விழுந்த சில வினாடிகளில் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களில் உடல்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.