இந்தியாவில் இதுவரை 35 கோடிக்கு மேல், கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் கொவிட் செயலணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி அளவுகளில் 10.21 கோடிக்கும் அதிகமானவை 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி நேர அறிக்கையின்படி 62 இலட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டன. 18-44 வயதுக்குட்பட்டவர்களில் குறைந்தது 28,33,691 பயனாளிகள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 3,29,889 பேர் தங்களது இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்.
அதாவது 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18-44 வயதுக்குட்பட்ட 99,434,862 பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.
தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தின் 3ஆம் கட்டம் ஆரம்பத்திலிருந்து இதுவரை 2,712,794 பேர் தங்கள் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பீகார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய எட்டு மாநிலங்களில் 18-44 வயதுக்குட்பட்ட பயனாளிகளுக்கு, 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட முதல் டோஸ் கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் ஒரே வயதிற்குட்பட்ட 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 21 ஆம் திகதி ஆரம்பமாகிய கொவிட்- 19 தடுப்பூசி திட்டம் இந்தியாவில் சிறந்த முறையில் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுகின்றது.