ரஷ்யாவிலிருந்து வரும் இணைய தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா தேவையான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இணைய தாக்குதல்களுக்காக ரஷ்யா பின்விளைவுகளை எதிர்கொள்ளுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஜனாதிபதி ஜோ பைடன், ‘ஆம்’ என பதிலளித்தார்.
ஆனால், கடந்த மாதத்தில் சைபர் தாக்குதல்கள் குறித்து ரஷ்யர்களை பலமுறை தொடர்பு கொண்டதாக அமெரிக்கா கூறும் கூற்றுக்களை மாஸ்கோ மறுத்தது.
அத்துடன், ஹேக்கர்கள் பயன்படுத்தும் சேவையகங்களை அமெரிக்கா தாக்க முடியுமா என்று ஒரு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஜனாதிபதி ஜோ பைடன், ‘ஆம்’ என பதிலளித்தார்.
புடினுக்கும் பைடனுக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொலைப்பேசி உரையாடல், கடந்த மாதம் ஜெனீவாவில் நடந்த சந்திப்பை தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தையாகும்.
ரஷ்யாவின் சைபர் தாக்குல்களுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த மாதத்தில் அமெரிக்கா, ரஷ்யாவின் 1,500 நிறுவனங்களை முடக்கிய சம்பவத்திற்கு பிறகு இது வருகிறது.
ஆனால், வெள்ளிக்கிழமை அழைப்பிற்குப் பிறகு, சைபர் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா மாஸ்கோவை தொடர்பு கொள்ளவில்லை என்று கிரெம்ளின் கூறியது.
‘தகவல் துறையில் குற்றவியல் நடவடிக்கைகளை கூட்டாகக் கட்டுப்படுத்த ரஷ்ய தரப்பில் இருந்து தயாராக இருந்தபோதிலும், கடந்த ஒரு மாதமாக தொடர்புடைய அமெரிக்கத் துறைகளிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் பெறப்படவில்லை’ என புடினின் அலுவலகத்திலிருந்து ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது.
பெயரிடப்படாத மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் ரஷ்யாவின் கூற்றை மறுத்தார், பைடன் நிர்வாகம் நடவடிக்கைக்கு பல, குறிப்பிட்ட கோரிக்கைகளை செய்ததாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.