பசில் ராஜபக்ஷ அமைச்சராக பதவியேற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை போட்டு குறிப்பையும் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிற்கு மதுரங்க குணதிலக என்பவர் பின்வருமாறு பதில் எழுதியுள்ளார்…..” ஸ்ரீலங்கர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள். தேர்தல் காலத்தில் அமெரிக்கா மிகவும் ஆபத்தான ஒரு நாடு. ஆனால் இப்பொழுதோ அமெரிக்க பிரஜைகள்தான் நாட்டில் உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.ஆனால் சீனாவால் காதலிக்கப்பட்டு கவசமிட்டுப் பாதுகாக்கப்படுகிறார்கள். இதுதான் ஆசியாவின் அதிசயம்” என்று.
பதவிக்கு வந்த புதிதில் அமெரிக்காவுடனான மில்லினியம் சலேன்ச் உடன்படிக்கை, சோபா உடன்படிக்கை, குறுக்கு சேவைகள் உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகளை ராஜபக்சக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவின் இரட்டைப் பிரஜையாக இருந்தவர் இப்பொழுது நிதியமைச்சர் இரட்டைப் பிரஜையாக இருக்கிறார்.
ஆனால் நாட்டின் பிரதமராக உள்ள மூத்த ராஜபக்சவான மகிந்த கூறுகிறார் “சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சி இடம்பெறும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும்….. ஒரு சக்திவாய்ந்த நாடாக சீனா நமது சுயாதீனத்தை பாதுகாக்க பெரிதும் உதவியது. இதுபொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய எங்களுக்கு உதவியது” என சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டு நிறைவையொட்டி அவர் வெளியிட்ட செய்தியில் இவ்வாறுள்ளது.
ஒருபுறம் சீனாதான் தமது சுயாதீனத்தை பாதுகாக்க உதவியது என்று மஹிந்த ராஜபக்ச கூறுகிறார். இன்னொருபுறம் அமெரிக்காவின் இரட்டை பிரஜா உரிமை பெற்ற பசில் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை நாட்டின் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் குழப்பமாகவே இருக்கும் அந்தக் குழப்பத்தின் பெயர்தானா ஆசியாவின் அதிசயம்?
பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் வரப்போகிறார் என்று சில மாதங்களுக்கு முன்னரே செய்திகள் வரத் துவங்கிவிட்டன. அவரை உள்ளே கொண்டு வரமுன் அவருடைய பிம்பத்தை அபரிதமான அளவிற்கு கட்டியெழுப்பும் விதத்தில் செய்திகள் வெளிவந்தன. அவர் ஏழு பேர்களுக்கு சமமானவர் என்றும் ஏழு தலைகளை கொண்டவர் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் சிலர் கூறினார்கள். ஒரு கார்ட்டூனிஸ்ட் அவரை ஏழு தலைகளோடு வரைந்தார். அவர் நாடாளுமன்றத்துக்குள் வர முன்னரே அவரைக் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்த அளவில் வெளிவரக் காரணம் என்ன?
காரணம் மிகவும் எளிமையானது. அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக்கொடுத்த சிங்கள பௌத்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்து விட்டார்கள். அரசாங்கத்தின் வெற்றிக்காக உழைத்த சிறிய கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக கதைக்கத் தொடங்கிவிட்டன. அரசாங்கத்தின் வெற்றியை கட்டியெழுப்பிய பிக்குகள் அரசாங்கத்தை விமர்சித்து பொதுவெளியில் பேசி வருகிறார்கள்.
யுத்த வெற்றியை ஒரு முதலீடாக வைத்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கம் அந்த வெற்றியை ஒரு பொருளாதார வெற்றியாக மாற்ற தவறிவிட்டது. குறிப்பாக வைரஸ் தொற்று நிலைமைகளை மேலும் மோசமாக்கியிருக்கிறது. ஒருபுறம் வைரஸ் இன்னொருபுறம் சரியும் பொருளாதாரம் இரண்டுக்கும் நடுவே தடுமாறும் அரசாங்கம் இந்த தடுமாற்றங்களில் இருந்து மீட்பதற்கு ஏதோ ஒரு மாற்றத்தை காட்ட வேண்டியிருக்கிறது. யாராவது ஒருவரை மீட்பராக காட்ட வேண்டியிருக்கிறது அதுதான் பசிலின் விடயத்தில் நடந்தது. அண்மை மாதங்களாக அவரை அப்படி ஒரு மீட்பராக சர்வரோக நிவாரணியாக கட்டமைக்கும் வேலைகளே நடந்தன.
பசில் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பொறுப்புக்கு புதியவரல்ல. ராஜபக்சேக்கள் முதலாவது ஆட்சியின் போதும் அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தார். அப்பொழுது அவர் எதை சாதித்தார் என்று பார்க்கவேண்டும்.
அது மட்டுமல்ல கடந்த ஓராண்டு காலமாக ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சியின்போது அவருடைய தலைமையின் கீழ் மூன்று செயலணிகள் இயங்கின. எனவே கடந்த ஓராண்டு காலமாக அவர் என்ன செய்தார் என்ற கேள்விக்கும் விடை வேண்டும். அவரைப் போன்ற ஒரு தனி மனிதரால் இலங்கை தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடுமா?
ஒருபுறம் அவருடைய வருகை அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை காட்டுகிறது. ஏற்கனவே பதவியில் இருக்கும் ஐந்து ராஜபக்சக்கள் நாட்டை செம்மையாக நிர்வகித்து இருந்திருந்தால் மற்றுமொரு ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வர வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஏற்கனவே ஐந்து ராஜபக்சக்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
அந்த ஐந்து பேர்களாலும் முடியாத ஒன்றை ஆறாவது ராஜபக்ச ஆகிய பஸிலைக் கொண்டு வந்து தீர்க்க முடியுமா? நாட்டின் குழப்பங்களுக்கு தீர்வு மேலும் ஒரு ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவருவதுதானா? அல்லது ஏற்கனவே ஐந்து ராஜபக்சக்கள் நாடாளுமன்றத்துக்குள் முக்கிய பொறுப்புக்களில் இருப்பது அதாவது குடும்ப ஆட்சியும் குழப்பங்களுக்கு ஒரு காரணமா? இது காரணமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வந்த ஓர் அரசாங்கம் நிலைமைகளை கையாள முடியாமல் போயிற்றோ அதே காரணத்தையே மீண்டும் பலப்படுத்தும் பசில் ராஜபக்சவின் மீள்வருகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது இப்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளை மேலும் அதிகப்படுத்துமா?
அல்லது மேலும் ஆழமாக கேட்டால் அவரை உள்ளே கொண்டு வந்ததன் நோக்கம் சரிந்து செல்லும் பொருளாதாரத்தை நிமிர்த்துவது அல்ல. அது வெளியில் காட்டப்படும் ஒரு கவர்ச்சியான தோற்றம்தான். மாறாக உண்மையான நோக்கம் வேறு என்று எடுத்துக்கொள்ளலாமா? ஆயின் அந்த மறைவான உள்நோக்கம் எது?
இக்கேள்விக்கு விடை தேடி அதிகம் ஆழத்திற்குச் செல்ல தேவையில்லை. கடந்த 12 ஆண்டுகளில் ராஜபக்சக்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று தொகுத்துப் பார்க்கும் எந்த ஊரு கூர்மையான அரசியல் அவதானிக்கும் அது கிடைத்துவிடும். கடந்த 12 ஆண்டுகளாக ராஜபக்சக்கள் தமது குடும்ப ஆட்சியை படிப்படியாக ஸ்தாபித்து வருகிறார்கள். யுத்தத்தை வென்றதன் மூலம் தொடர்ந்து வரக்கூடிய எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறக்கூடிய ஆகப்பெரிய தகுதியை அவர்கள் பெற்றார்கள்.
அது இலங்கைத்தீவில் வேறு எந்தக் கட்சிக்கும் கிடைத்திராத ஒரு தகுதி. இப்போது ஆட்சியில் பங்காளிகளாக இருந்து கொண்டு அவர்களோடு முரண்படும் சிறிய கட்சிகளாலும் அதை மேவிச் செல்ல முடியாது. அதாவது யுத்த வெற்றியை விட பெரிய இனவாதம் இனிக் கிடையாது அப்படி ஒரு இனவாதத்துக்கு தலைமை தாங்கி ராஜபக்ஷக்களுக்கு சவாலாக எழுவதற்கு இச்சிறு கட்சிகளால் முடியாது.
இவ்வாறு யுத்த வெற்றியை அடிப்படையாக வைத்து ராஜபக்சக்கள் உருவாக்கியதே யுத்த வெற்றிவாதம். அதற்குத் தலைமை தாங்கிய ராஜபக்சக்கள் அந்த யுத்த வெற்றியை தமது குடும்பத்திற்கு மட்டும் உரியதாக மாற்றினார்கள். அதன் பங்குகளில் ஒருவரான சரத் பொன்சேகாவை வெளியே விட்டார்கள்.
அதன்பின் குடும்ப ஆட்சியையும் யுத்த வெற்றி வாதத்தையும் ஒன்றை மற்றதிலிருந்து பிரிக்க முடியாதபடி பிணைத்து அதை ஒரு கட்சியாக நிறுவனமயப்படுத்தினார்கள். அதுதான் தாமரை மொட்டு கட்சி. எனவே எதிர்காலத்திலும் வரக்கூடிய எல்லா தேர்தல்களின் போதும் யுத்த வெற்றிதான் அவர்களைப் பொருத்தவரை ஒரே வம்சச் சொத்தும் முதலீடும்.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் சிந்தித்தால் ஒரு வம்ச ஆட்சியை பாதுகாப்பதே அவர்களுடைய எல்லா செயற்பாடுகளினதும் உட்சரடு ஆகும். அவ்வாறு வம்ச ஆட்சியை பாதுகாப்பது என்று சொன்னால் பசிலை உள்ளே கொண்டுவர வேண்டும். ஏனெனில் மூத்த ராஜபக்சவாகிய மஹிந்தவுக்கு வயதாகிவிட்டது. அவருடைய உடல்நிலை மேலும் பலவீனம் அடைந்தால் அவருடைய இடத்திற்கு அதாவது பிரதமர் பதவிக்கு பொறுப்பான ஒருவர் தேவை.
அவர் குடும்பத்தில் மூத்தவராகவும் எல்லாரையும் அரவணைத்துப் போக கூடியவராகவும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக காத்திருக்கும் இளம் ராஜபக்சக்களிடம் வம்ச ஆட்சியை கையளிக்க கூடியவராகவும் இருக்க வேண்டும். ஒப்பீட்டளவில் இத்தகுதிகள் யாவும் பசில் ராஜபக்சவுக்கு உண்டு என்று ராஜபக்சக்கள் நம்பமுடியும். அந்த அடிப்படையில் தான் அவர் நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார். அதாவது ராஜபக்சக்களின் வம்ச ஆட்சியை தொடர்ச்சியறாமல் பாதுகாப்பதற்காக.
இவ்வாறு ஒரு ராஜ வம்சத்தை போல நாட்டை தொடர்ந்தும் ஆளத்தக்க விதத்தில் யாப்பை அவர்கள் ஏற்கனவே மாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக 20ஆவது திருத்தச்சட்டம் அந்த உள்நோக்கத்தை கொண்டது. இப்பொழுது பசிலை உள்ளே கொண்டு வருவதற்கும் அதுதான் உதவியிருக்கிறது.
யாப்பின் 99 ஏபிரிவின் படி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படக்கூடியவர்கள் என 2020 நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவினால் வெளியிடப்பட்ட பட்டியலில் பசில்ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் இச்சரத்து தேர்தல் முடிந்தவுடன் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக குறிப்பிடுகின்றதே தவிர, அதன் பின்னர் வெற்றிடங்கள் ஏற்படும்போது அவ்வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக குறிப்பிடவில்லை என்று வை.எல்.எஸ்.ஹமீட் போன்றோர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அரசியல் அமைப்பில் தேசியப்பட்டியல் வெற்றிடம் நிரப்புவது தொடர்பாக குறிப்பிடாதபோதும் 1 ம் இலக்க, 1981ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பிரிவு 64(5) இல் இது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, அவ்வாறு வெற்றிடம் ஏற்படும்போது தேர்தல் ஆணையாளர் தனது “கட்சியின் உறுப்பினர்” ஒருவரை முன்மொழியுமாறு அக்கட்சியின் செயலாளரைக் கோரவேண்டும். அவ்வாறு முன்மொழியப்படுபவரை தேர்தல் ஆணையாளர் பாராளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தவேண்டும்.
எனவே, இதன்பிரகாரம், முதல் தடவை தேசியப்பட்டியலுக்கான நியமனம் குறித்த இரண்டு பட்டியல்களில் ஒரு பட்டியலில் இருந்து செய்யப்படவேண்டும். அதன்பின் ஏதாவதோர் தேசியப்பட்டியல் வெற்றிடம் ஏற்பட்டால் கட்சியின் அங்கத்தவர் ஒருவரை நியமிக்க முடியும். அவரது பெயர் எந்தவொரு பட்டியலிலும் இருக்கவேண்டிய அவசியமில்லை. என்று வை.எல்.எஸ்.ஹமீட் சுட்டிக்காட்டுகிறார்.
எனினும் இது தொடர்பான சர்ச்சைகளை அரசாங்கம் இலகுவாகக் கடந்து வரக்காரணம் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் சுயாதீனத்தை இழந்தமைதான் என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
20ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவீனமாக்க பட்டுவிட்டன. ஜனாதிபதி சுயாதீன ஆணைக்குழுக்களை மேவிச் செல்ல தேவையான அதிகாரத்தை பெற்றுவிட்டார். அதாவது ஓர் அரசனைப் போல அவர் நடந்து கொள்ளலாம்.
எனவே ராஜபக்சக்கள் தமது வம்சஆட்சியை தொடரும் விதத்தில் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? எனவே ஆறாவது ராஜபக்சவும் நாடாளுமன்றத்துக்குள் வருவது என்பது 20ஆவது திருத்தத்தின் ஒரு விளைவுதான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நிமிர்த்தப்படுமோ இல்லையோ ராஜபக்சக்களின் வம்ச ஆட்சியை தொடர்வதற்கான வாய்ப்புகள் பலப்படுத்தப்படும் என்றே தெரிகிறது.
கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்