மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 55பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாநிலத்தில், அஹ்ர்வீலர் மாவட்டத்தில் 1,300பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜேர்மனியில் மட்டும் 49பேர் உயிரிழந்துள்ளதோடு பலரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அண்டை நாடான பெல்ஜியத்தில் 6பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்பிற்குப் பிறகு பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய நகர்ப்புறப் பகுதியான லீஜினில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அந்நகர மேயர் வலியுறுத்தியுள்ளார்.
வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்கள் தங்கள் கட்டடங்களின் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு மாகாணமான லிம்பர்க்கில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.