கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெருநகரப் பல்கலைக்கழக திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் பெரும்பாலானோர், அரச தொழிலை எதிர்பார்ப்பதாகவும் தொழில் வழங்குவதை விட, தொழிலை உருவாக்கும் பொருளாதார பின்புலத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டையே அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்திற்கு நேரடியாக தொடர்புபடும் அல்லது சுயதொழிலில் ஈடுபடக்கூடிய அறிவுள்ள நபரை பட்டப்படிப்பின் பின் உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
100 வீதம் அரச பல்கலைக்கழகங்களை நடத்த முடியாது என கூறியுள்ள ஜனாதிபதி, வர்த்தக நோக்குடன் மாத்திரம் செயற்படுத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்களில் ஈட்டும் வருமானத்தை கல்வி நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, பெருநகர பல்கலைக்கழகத்திற்கான முதலாவது திட்டத்தை கேகாலை – பின்னவல பகுதியில் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.