கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் தொகையில் 8% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிகளில் மட்டும் நம்பிக்கை வைப்பதன் மூலம் முன்னேற முடியாது என்றும் குறிப்பிட்டார்.
டெல்டா வைரஸ் மாறுபாடு வேகமாக பரவி வருவதாகவும், நாடு இப்போது நான்காவது அலையின் விளிம்பில் உள்ளது என்றும் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இந்த காலகட்டத்தில் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நான்காவது அலையைத் தடுக்கவும் பொதுமக்களும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.