மத்திய சீன நகரமான ஜெங்ஜோவில் கடுமையான வெள்ளத்தில் சிக்கியுள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, குறைவான பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள உறவினர்களுடன் தங்குவதற்கு, நகரத்தைக் கடப்பது அல்லது கிராமப்புறங்களிலுள்ள வீடுகளுக்குத் திரும்புவது சாத்தியமில்லாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நீரில் மூழ்கிய பகுதிகள் அவர்களது வாழ்வாதாரங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உறவுகள், மிகவும் தொலைவிலேயே வாழ்வதாக கூறப்படுகின்றது.
இத்தகைய நிலைமையில் சிக்கியுள்ள சாண்டோங் மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதான ஹூ என்ற கட்டுமானத் தொழிலாளி, தனது உணவு மற்றும் தண்ணீரை அளவாக பங்கீடு செய்து பயன்படுத்துவதாகவும் செல்போன் வரவேற்பைத் தேடி ஒரு நாளைக்கு ஒரு முறை இடுப்பு-உயரமான, மண் நிற நீரில் இறங்குவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் குறித்த நிலைமை தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது,”என்னால் வெறுமனே எனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாது. நான் இங்கு வேலை செய்கிறேன்.
சிலர் அருகிலுள்ள உறவினர்களின் இடங்களுக்கு செல்லலாம். உள்ளூர்வாசிகள் அல்லாத எங்களுக்கு வெளியே செல்வது எளிதல்ல. எங்களுக்கு வீட்டிற்கு செல்வதற்கும் வழி இல்லை” என கூறியுள்ளார்.
சீனாவின் மதிப்பிடப்பட்ட 280 மில்லியன் கிராமப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் சிறந்த வேலைகளைத் தேடி ஜெங்ஜோ போன்ற நகரங்களுக்குச் செல்கின்றனர். குடும்பங்களை விட்டு வெளியேறி, புத்தாண்டுக்காக வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வீடு திரும்புகிறார்கள்.
இதேவேளை 12 மில்லியனுக்கும் அதிகமான நகரம் இந்த வாரம் வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெங்ஜோ அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக காணப்படுவதுடன் ஐந்து பேரைக் காணவில்லை என மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜு லிங்கியன், (வயது 35)என்ற புலம் பெயர்ந்த தொழிலாளியின் குடும்பம் மற்றும் வியாபாரம் ஆகியன வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஜெங்ஜோவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு நகரத்திலிருந்து வந்த அவர், வெள்ளம் ஏற்படுவதற்கு சற்று முன்பு ஒரு நூடில்ஸ் உணவகத்தைத் திறந்து, தனது வாழ்க்கைச் சேமிப்பை 200,000 யுவான் (எஸ் $ 42,000) வணிகத்தில் முதலீடு செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வெள்ளத்தினால் அனைத்து மின் சாதனங்களும் பாழாகி விட்டதாகவும் அதனை சரிசெய்ய 30,000 யுவான் வரை செலவாகும் என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் எனது கணவர் இங்கு வேலை செய்வதுடன் எனது குழந்தைகளும் இங்கே பள்ளிக்குச் செல்கின்றமையினால் இவ்விடத்தில் இருந்து செல்ல முடியாது என அவர் கூறியுள்ளார்.