உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தினை உருவாக்கும் வகையிலே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடலட்டை போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000 நேரடி வேலை வாய்ப்புக்களையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.
கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இயன்றளவில் கடற்றொழிலையும் நன்னீர் சார்ந்த வோண்மைத் துறைகளையும் மேலும் மேலும் பரவலாக வளர்த்தெடுத்து உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கின்ற நடவடிக்கைகளை இடைவிடாது மேற்கொண்டு வருகின்றேன்.
சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரம் கூட இடுப்பளவு நீராகும். போதிக்க மட்டும் தெரிந்தவனுக்கு இடுப்பளவு நீரும் சமுத்திர நீராகவே தென்படும். கடந்த ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் தலைகள் மீது மிளகாய் அரைத்தவர்கள் எதை சாதித்தார்கள்?
அடிக்கல் நாட்ட வந்த ஆட்சியாளர்களை கண்டவுடன் குனிந்து கும்பிட்டு பல்லிளித்து மட்டும் நின்றார்கள். ஒவ்வொரு வரவு செலவு திடத்தை ஆதரித்து வாக்களிக்கும் போதும் பணப்பெட்டிகளை வாங்கிக்கொண்டு பெட்டிப்பாம்புகளாக கைகட்டி அடங்கிக்கிடந்தார்கள்.
இந்தவிறகுக் கட்டை விடுதலை வீரர்கள், கிளிநொச்சி புலிநொச்சியாக இருந்த காலத்தில் 75 கள்ள வாக்குகளைப் போட்டதாக ஒப்புக்கொண்டார்கள். அவ்வாறான ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் எமது மக்களை ஏமாற்றப் போவதில்லை.
அந்தவகையில், அனைத்து உற்பத்தித் துறைகளும் மேலோங்கும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.