நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது பொற்றோர் உள்ளிட்ட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட இரண்டு விசேட விசாரணை குழுக்கள் நேற்று டயகம பகுதிக்கு சென்று விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தன என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறுமியின் தாயிடம் இரண்டாம் நாளாகவும் நேற்று சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அதேநேரம் குறித்த சிறுமியை ரிசாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து சென்ற தரகரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.