பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை ஜனாதிபதி உன்னிப்பாகவும் தீவிரமாகவும் கவனித்துவருகிறார்.
பெகாசஸ் விவகாரம் மற்றும் ஃசைபர் பாதுகாப்பு குறித்து விவாதிக்க திட்டமிடப்படாத தேசிய பாதுகாப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.
பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகின் முக்கியப் ஊடகவியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களின் தொலைப்பேசிகளை அவர்கள் சார்ந்த நாட்டின் அரசாங்கமே உளவு பார்த்தது என்பதுதான் சமீபத்தில் உலக அரசியலை உலுக்கிக்கொண்டிருக்கும் செய்தி. ‘பெகாசஸ் புராஜக்ட்’ என்ற பெயரில் ‘த கார்டியன்’ உள்ளிட்ட 16 ஊடங்கங்கள் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் உலகம் முழுவதும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோரின் தொலைப்பேசிகள் ஹேக் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பெகாசஸ் ஸ்பைவேர் ஒரு தொலைப்பேசியிலிருந்து நீக்கப்படும்போது அது பயன்படுத்தப்பட்டதற்கான தடையங்களும் சேர்ந்தே அழிந்துவிடும் என்பதால், இதனால் பாதிக்கப்பட்ட தொலைப்பேசிகளைக் கண்டறிவது கடினமாக இருந்திருக்கிறது
இம்மானுவேல் மக்ரோனை தவிர, ஈராக் ஜனாதிபதி பர்ஹம் சாலி, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பௌலி, மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி ஆகியோரின் எண்கள் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்துள்ளது என த வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.