கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மேலும் விசாரிக்க உலக சுகாதார நிறுவனம் முன் மொழிந்த திட்டத்தை சீனா நிராகரித்துள்ளது.
சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், கொரோனா தொற்றின் உருவாக்கம் குறித்த விசாரணையில் சீனா அதிக ஒத்துழைப்பை தர வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணையில் சீன ஆய்வகங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் முன் மொழிந்த திட்டத்தை சீனா நிராகரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த திட்டம் பொது அறிவுக்கு எதிரான அவமரியாதை என்றும் அறிவியலை நோக்கிய முரட்டுத் தனம் என்றும் சீனாவின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அரசியல் சார்ந்தது எனவே சீனா அதை ஒப்புக் கொள்ளாது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது.
ஆனால், வூஹானில்தான் கொரோனா வைரஸ் தோன்றியது என்பதை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்டிருந்தாலும் உலகின் வேறுபட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்பது சீனாவின் வாதம்.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது என பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
முன்னதாக மே 28ஆம் திகதி, மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உளவு அமைப்புகளுக்கு 90 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.