நீண்ட தடை மற்றும் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் தொடர், இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 32ஆவது அத்தியாயம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று முதல் எதிர்வரும் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில், 204 நாடுகளை சேர்ந்த 11,200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள்.
கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற இருந்த ஒலிம்பிக், இந்த ஆண்டு நடைபெறுகின்றது.
இந்த வருடமும் கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில்தான் ஜப்பான், ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என இதுவரை 80 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் இடத்தில் நுழையப் போட்டியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கும் தினமும் பரிசோதனை செய்யப்படுகிறது.