இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் முதல்முறையாக நடத்தப்படும் த ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடரின், முதல் லீக் போட்டியில் ஒவல் இன்விசிபல்ஸ் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
லண்டன்- கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஒவல் இன்விசிபல்ஸ் அணியும் மன்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மன்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஒவல் இன்விசிபல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சேம் பிளிங்ஸ் 49 ஓட்டங்களையும் டொம் கர்ரன் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மன்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி சார்பில், ப்ரெட் கிளாசன் 3 விக்கெட்டுகளையும் டொம் ஹாட்லீ மற்றும் பின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மெத்தியு பார்கின்ஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மன்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் ஒவல் இன்விசிபல்ஸ் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கார்லோஸ் பிரத்வெயிட் 37 ஓட்டங்களையும் கொலின் முன்ரோ 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஒவல் இன்விசிபல்ஸ் அணியின் பந்துவீச்சில், சேம் கர்ரன் மற்றும் நாதன் சௌடர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சுனில் நரேன், ரீஸ் டொப்லே மற்றும் டொம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சேம் பிளிங்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.