சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை எதிர்வரும் தினங்களில் தோண்டி எடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ள பொது மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஹிஷாலினியின் பெற்றோர்கள் கொழும்பிலுள்ள மனித உரிமை திணைகளத்தில் நேற்று முறைபாடு ஒன்றினை பதிவு செய்தனர்.
குறித்த முறைப்பாட்டில், தனது மகளுக்கு பல்வேறு அநீதிகள் இடம்பெற்றதாகவும் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்தே சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுப்பதற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த உத்தரவுக்கமைய இன்றும் சிறுமியின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்களை திரட்டும் பொருட்டு, கொழும்பு வடக்கு பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு, நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர், டயகம பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு விசேட விசாரணைகளை மேற்கொண்டன.
இந்நிலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்ட ஹிஷாலினியின் சடலம், எதிர்வரும் தினங்களில் தோண்டி எடுக்கப்படுமென டயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.