வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் திருவிழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்திநிதி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (புதன்கிழமை) பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
பெருந்திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் ஆலய உள் வீதியில் மட்டுமே வழிபாடுகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல் என்பவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சிறப்பு தனியார், அரச பேருந்துகள் சேவைகள் ஈடுபட அனுமதியில்லை என்பதுடன் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆலயச் சுற்றாடலிலுள்ள வீதிகளில் மண்டகப்படி வைத்தல், பிரசாதம் வைத்தல், தாக சாந்தி, அன்னதானம் வழங்கல் என்பனவற்றுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்றினை கருதிக்கொண்டு அங்கபிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், காவடி, தூக்குக் காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடனை மேற்கொள்ளவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆலயச் சுற்றாடல் மற்றும் ஆலயத்தை அண்டிய பகுதியில் அடியவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், கலை நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்குக்கான அனைத்து நிகழ்வுகளும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த ஆண்டு நீர்ப்பாசனத் திணைக்கள பாலத்துடனான போக்குவரத்து இடம்பெறாது என்றும் அடியவர்கள் நீண்ட நேரம் ஆலயத்தில் தரித்து நிற்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆலய வழிபாடுகளின்போது ஆலயச் சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.