இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மாதம் மே மாதம் முதல் இந்தியா மற்றும் சீன இராணுவங்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த பெப்ரவரி மாதம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு தரப்பு படைகள் திரும்பப் பெறப்பட்டன.
அத்துடன் இரு தரப்பிலும் இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையிலேயே இன்று காலை 10.30 மணியளவில், அசல் கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியிலுள்ள மால்டோ எல்லை முனையில் 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது எல்லையில் ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா பகுதிகளில் நிலுவையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரின் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.