ஆப்கானிஸ்தானில் செயற்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை தலிபான்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது என ஆப்கானிஸ்தானின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியும், ஐ.நா.வின் உதவி தூதுக் குழுவின் தலைவருமான டெபோரா லியோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ஐ.நா. இதை மிகவும் வலுவான வகையில் கண்டிக்கிறது. எங்கள் முதல் எண்ணங்கள் கொல்லப்பட்ட அதிகாரியின் குடும்பத்துடன் உள்ளது மற்றும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறோம்’ என கூறினார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஹெராட்டில் உள்ள ஐக்கிய நாடுகளின் வளாகத்தில் ரொக்கெட் கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
தலிபான்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில், பொலிஸ் காவலர் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக ஐ.நா. அறிக்கையில், ‘தெளிவாகக் குறிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் வளாகத்தின் நுழைவாயில்கள் அரசாங்க விரோதிகளால் குறிவைத்து தாக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அலுவலகத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.