உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் நாட்டின் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பிரித்தானிய மற்றும் ரோமேனியாவைச் சேர்ந்த இரண்டு கப்பல் ஊழியர்கள் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.
இந்தநிலையில் இத்தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், இதனை ஈரான் மறுத்துள்ளது.
இதனிடையே இதுதொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உண்மைகளை அவசரமாக நிறுவ முயற்சிகின்றோம்.
ஓமன் கடற்கரையில் ஒரு டேங்கரில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து இறந்த ஒரு பிரித்தானிய நாட்டவரின் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன.
சர்வதேச சட்டத்தின்படி கப்பல்கள் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் இயால் ஓபருக்கு சொந்தமான இந்த கப்பல், தான்சானியா நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று கொண்டிருந்தபோது ஓமன் நாட்டு கடலில் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்தது.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இஸ்ரேல் நாட்டு எண்ணெய் கப்பல் மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.