நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், உயிரிழந்த டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினிக்கு சுயமாக ஆங்கிலத்தில் எழுத தெரியாது என அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், தனது சகோதரிக்கு ஆங்கில எழுத்துக்களை பார்த்து எழுத முடியுமே தவிர, ஆங்கிலத்தில் சுயமாக எழுத முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது சகோதரி தரம் 7 வரையிலேயே பாடசாலையில் கல்வி கற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழுவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே, ஹிலாலினியின் அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதில் ‘என் சாவுக்கு காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.