நாட்டின் 4 பகுதிகளில் இருந்து வாகனப் பேரணிகள் இன்று (புதன்கிழமை) கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வேதன பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி இந்த வாகனப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன்படி, நீர்கொழும்பு வீதியின் வெலிசரை, கண்டி வீதியின் கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில், ஹைலெவல் வீதியின் கொட்டாவை, காலி வீதியின் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகன பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன.
இன்று முற்பகல் குறித்த பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் புறப்பட்டு, பிற்பகல் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும், அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் இணக்கப்பாடு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.