மொழி, மதம் மற்றும் இனம் தொடர்பாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட நிலையற்ற கூற்றுகளானவை சுதந்திரத்திற்குப் பிந்தைய கால இலங்கை அரசியலினைக் களங்கப்படுத்தியுள்ளன.
பௌத்தம் என்பது மிகச் சிறந்ததும் சிங்களவர்களுக்கே உரித்தானதுமான சிங்கள மதம் என சிங்களவர்கள் உரத்துக் கூறுகின்றார்கள். மறுபுறமாக அதே தீவிரத்துடன், தாம் எப்போதும் கலப்படமற்ற தூய இந்துக்களாக இருந்ததாகவும் தமக்கு பௌத்தத்துடன் எந்தத் தொடர்புமில்லை எனவும் தமிழர்கள் கூறுவதோடு, பௌத்தத்தை “சிங்கள மேலாதிக்கம்” என அடையாளம் காண்கின்றனர்.
தமிழர் செல்வாக்குள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்லியல் இடங்களானவை சிங்கள பௌத்தத்தின் நினைவுச் சின்னங்கள் என்று கூறும் தீவிரத்தன்மை கொண்ட சிங்கள பௌத்தர்கள், அந்த நிலங்கள் மீதான சிங்களவர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமெனக் கூறுகின்றனர். மறுபுறம், இந்தத் தொல்லியற் கண்டெடுப்புகளானவை தமக்கு எதிரானவையாக இருக்குமென தமிழர்கள் நினைக்கிறார்கள். தமிழர்களும் பௌத்த சின்னங்களை சிங்களத்துடன் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்துவதனால், அத்தகைய தொல்லியற் பௌத்த சின்னங்களானவை தமது இருப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்குமென நோக்குகிறார்கள்.
சில சமயங்களில் அவர்கள் இந்த நினைவுச் சின்னங்களை அழித்ததாகச் சொல்லப்படுவதானது, அவற்றைப் பாதுகாக்க வேண்டிய வழிகளைப் பற்றி அரசாங்கத்தைச் சிந்திக்கத் தூண்டியது. வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவது தொடர்பாக சில தரப்புகள் குரல் எழுப்பியதால், கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் இடங்கள் குறித்து விரிவான ஆய்வை நடத்தவும் அவற்றைப் பாதுகாக்கவும், பாதுகாப்புச் செயலரின் கீழ் ஒரு ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி கோத்தாபய கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தார். அந்த ஜனாதிபதி செலயணியானது முற்றுமுழுதாகச் சிங்கள பௌத்தர்களைக் கொண்டதாக இருந்தது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசறிவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவராக இருந்த கலாநிதி ஜிந்தோட்ட பி.வி. சோமரத்தின “இலங்கையில் தமிழ்ப் பௌத்தர்கள்” என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் “சிங்கள பௌத்தர்கள் இந்த நினைவுச் சின்னங்களை சிங்களவர்களுடையது எனக் கூறுவதும் இது தொடர்பாக தமிழர்களின் பாதுகாப்பின்மை என்பதுமான இரண்டு வகைக் கூற்றும் வரலாற்றைச் சரியான நோக்குநிலையில் நின்று நோக்கினால் ஆதாரமற்றவை” எனக் கூறுகின்றார்.
உண்மையெதுவெனில், பெரும்பான்மையான தமிழர்கள் முன்னர் பௌத்தர்களாக இருந்துள்ளனர். பின்பற்றப்பட்ட மற்றும் பின்பற்றப்பட்டு வருகின்ற சிங்கள பௌத்தத்தில் தமிழ் இந்துவின் கூறுகள் பல உண்டு. இலங்கையானது ஒன்றுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. பௌத்தர்களும் இந்துக்களும் அமைதியாக இணைந்து வாழ்ந்து, பிற்பட்ட காலங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். உண்மையில், நம்பிக்கைகளும் நடைமுறைகளும் பகிரப்பட்டமையால், இருவருக்குமிடையில் ஒரு தெளிவான பிரிகோடு இருக்கவில்லை. உதாரணமாக, இந்தியாவைச் சேர்ந்த மன்னர்கள் தனிப்பட்ட ரீதியில் இந்துக்களாக இருந்தாலும் அவர்கள் தமது ஆட்சியில் பௌத்தத்தைக் காத்தார்கள். நாயக்க வம்சத்தைச் சேர்ந்த கண்டி மன்னர்கள் (1739- 1815) இந்துக்களாகவே இருந்தனர். ஆனால், அவர்கள் பௌத்தத்தைக் காப்பாற்றியதால் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
“பிரித்தானியர்கள் வருவதற்கு முன்னர் இன- மதப் பதற்றங்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை” என வரலாற்றாசிரியர் கே.எம்.டி. சில்வா கூறுகிறார். டச்சுக்காலத்தில் சிங்களவர், தமிழர் என இனப்பிரிப்புகள் இருக்கவில்லை எனவும் சாதிப்பிரிப்புகளே இருந்தன எனவும் கத்தோலிக்கத் தேவாலயத்தின் வரலாற்றாசிரியர் வி.பேனியலா குறிப்பிடுகிறார். 1871 இல் தொடங்கி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனத்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் 1931 இலிருந்து நடைமுறைக்கு வந்த உலகளாவிய வயது வந்தோரிற்கான வாக்குரிமை என்பன வந்தமைக்குப் பின்பே, அரசியல் ஆதரவு பெற இன அடையாளம் பயன்படுத்தப்படலாயிற்று என கலாநிதி சோமரத்ன கருதுகிறார். இலங்கையிலுள்ள பௌத்தமானது தமிழ்நாட்டிலிருந்த பௌத்தத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது என என கலாநிதி சோமரத்ன சுட்டிக்காட்டுகிறார். பௌத்தமானது தமிழ்நாட்டில் 3 கட்டங்களாக வளர்ந்திருந்தது. 3 ஆம் நூற்றாண்டிற்கும் 7 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், பல்லவர் காலத்தில் (கி.பி . 400- 650) மற்றும் சோழர் காலத்தில் (9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை) என பௌத்தமானது தமிழ்நாட்டில் வளார்ச்சியடைந்திருந்தது.
தம்பபன்னி (இலங்கை) விலகலாக, தமிழ்நாட்டின் கேரள, சோழ, பாண்டிய மற்றும் சேர இராட்சியங்கள் அசோகனின் பாறைக் கட்டளைகள் ii, vமற்றும் viii இல் குறிப்பிடப்படுகின்றன. தம்பபன்னி (இலங்கை) விலகலாக, தமிழ்நாட்டின் கேரள, சோழ, பாண்டிய மற்றும் சேர இராட்சியங்கள் அசோகனின் பாறைக் கட்டளைகள் மற்றும் இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்த இடங்களானவை பேரரசன் அசோகன் பௌத்த மதம் பரப்பும் குழுக்களை அனுப்பிய இடங்களாகும். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பிராபி எழுத்துகளாலான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அசோகப் பேரரசனின் பௌத்தத்தைப் பரப்பும் மிசனரிகள் மூலமே பிராமி எழுத்துக்களானவை தென்னிந்தியாவிற்கு வந்தடைந்தது. அசோகப் பேரரசனின் மகனான மகிந்ததேரர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் தம்மத்தினைப் பரப்பினார் என்பதற்குச் சான்று உண்டு. வட இந்தியாவின் துறைமுகம் ஒன்றிலிருந்து கடல்வழியாகப் புறப்பட்ட மகிந்ததேரர் தமிழ்நாட்டின் காவேரிப்பட்டிணத்தில் இறங்கிய பின்பே யாழ்ப்பாணத்திலுள்ள ஜம்புகோளப்பட்டிணத்திற்கு வருகை தந்தார். தேவநம்பியதீச மன்னனின் பிரதிநிதிகள் அசோகப் பேரரசனின் மௌரிய தேசத்திற்கு சம்புகோளப்பட்டிணத்திலிருந்தே (கி.மு 230 அளவில்) புறப்பட்டார்கள்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாளி அறிஞர்களில் புத்தகோசா, புத்ததாதா மற்றும் தர்மபால ஆகியோர் அடங்குவர். கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு விஜயம் செய்த சீன பௌத்த துறவியும் புலமையாளருமான சுவான் சாங் “100 இர்கு மேற்பட்ட பௌத்த மடாலயங்களையும் 1000 இற்கு மேற்பட்ட பௌத்த துறவிகளையும் கொண்ட பௌத்தர்களின் செழுமையான நகராக பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரம் விளங்கியது” என விபரிக்கிறார். பௌத்தரான சீத்தலைச் சாத்தனார் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் எழுதிய மணிமேகலை என்ற காப்பியத்தில் தமிழ்நாட்டிலிருந்த மற்றும் இலங்கையில் இருந்த பௌத்த துறவிகளிற்கிடையிலான தொடர்புகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றன. சிறைச்சாலைகளை பிக்குகளைக் கொண்டு பக்தியிடங்களாக மாற்றுமாறு மணிமேகலை வேண்டுகோள் வைத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரக்கமுள்ள வாழ்க்கைமுறை பற்றிய புத்தரின் போதனைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரம், வளையாவதி, குண்டலகேசி மற்றும் சீவகசிந்தாமணி ஆகியவை பௌத்தத்தின் செல்வாக்கைக் காட்டும் ஏனைய தமிழ் இலக்கியக் காப்பியங்களாக இருக்கின்றன. பண்டைத் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியமானது (கி.மு 3 ஆம் நூற்றாண்டு) பௌத்தர் ஒருவரால் எழுதப்பட்டது. பௌத்தத்தின் ஒரு பிரிவானது 10 ஆம் நூற்றாண்டு வரை பௌத்தத்தை நன்கு ஆதரித்தது. தீவிரமான மதஞ்சார்ந்த விவாதங்களாலும், ஆட்சியாளர்களின் மதமாற்றல்களுக்கு அஞ்சியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவிகள் இலங்கைக்குத் தப்பியோடிய நிகழ்வுகளும் சுவான் சாங்கினால் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக கலாநிதி சோமரத்ன சுட்டிக்காட்டுகிறார்.
தனது இராட்சியத்தில் பௌத்தத்தைப் புத்துயிர்பெறச் செய்வதற்காக பௌத்த நூல்களுடன் பௌத்த பிக்குகளைச் சோழ நாட்டிலிருந்து தம்பதேனியாவின் மன்னனான 6 ஆம் பராக்கிரமபாகு 13 ஆம் நூற்றாண்டில் அழைத்தார் என சூளவம்சம் கூறுகிறது.
யாழ்ப்பாணத்தில் பல பௌத்த விகாரைகள் இருந்தன என்பதைக் காட்ட மகாவம்சம் மேற்கோள் காட்டப்படுகின்றது. திஸ்சமகா விகாரை மற்றும் பச்சின விகாரை என்ற இரு விகாரைகளை சம்புகோளப்பட்டிணத்திற்கு அருகாமையில் தேவநம்பியதீச மன்னன் கட்டினான். புங்குடுதீவிலி இருந்து வந்த பௌத்த துறவிகள் துட்டகாமினியின் நற்செயல்களில் பங்குபெற்றினர்., தாதுசேன மன்னன் மகாநாக விகாரையை (கி.பி 455- 473) மீட்டெடுத்தான்.
“யாழ்ப்பாணத்திலுள்ள கந்தரோடை, வல்லிபுரம், பொன்னாலை, மகியாபினி, நிலாவரை, உடுவில், நயினாதீவு, புங்குடுதீவு மற்றும் செடுந்தீவு போன்ற இடங்களில் கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்ககாலத்திற்குரிய பௌத்த எச்சங்கள் உள்ளன. வல்வெட்டித்துறையின் அருகே உள்ள வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த தொல்லியல் எச்சமானது யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தின் வரலாற்று இருப்பைக் காட்டுகிறது. கந்தரோடையில் மிகவும் செழிப்பான தொல்லியல் சான்றுகள் உண்டு. இவை கி.பி. 1 ஆம் நூற்றாண்டிற்குரியன”, என கலாநிதி சோமரத்ன சுட்டிக்காட்டுகிறார்.
வரலாற்றாசிரியர் போல்.இ. பீரிஸ் அவர்கள் புராதன கந்தரோடை விகாரையின் எச்சங்களை 1917 இல் அடையாளங் காட்டினார். புத்த பிக்குகளின் மடங்களாக அமைந்த தூதுகோபங்கள் கூட்டமாக இதற்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது. புனித அறையின் எச்சங்கள், புத்தரின் படங்கள், நாணயங்கள், 60 சிறிய மற்றும் பெரிய தூபிகள், தூபிகளின் எச்சங்கள், புத்தரின் பாதம் பொறிக்கப்பட்ட கற்கள் மற்றும் ஓடுகள் என்பன அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன. கி.மு. 300 ஆண்டுகளிலிருந்தான தமிழ் பிரமி எழுத்துகளைக் கொண்ட சிவப்பு- கறுப்பு மட்பாண்ட ஓடுகள், உரோம நாணயங்கள், பண்டைய பாண்டிய நாணயங்கள் மற்றும் பண்டையகால சேர இராட்சியத்தின் நாணயங்கள் என்பன இங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்றன.
மாணிக்கத்தினாலான சிம்மாசனம் தொடர்பாக இரு நாக மன்னர்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கைப் புத்தர் தீர்த்து வைத்தார் என மணிமேகலை மற்றும் மகாவம்சம் ஆகியவை விபரிக்கின்றன.
இருந்தபோதிலும், எல்லாக் காலப்பகுதியிலும் இலங்கையிலுள்ள பௌத்தர்கள் சிங்களவர்கள் என்ற எடுகோளின் அடிப்படையில் இந்த தொல்லியல் எச்சங்களை சிங்களவர்களின் பிரசன்னத்திற்கான சான்றாக சிங்களவர்கள் எழுதுகின்றனர் என கலாநிதி சோமரத்ன கூறுகிறார். பெரும்பான்மையான தமிழர்கள் அக்காலத்தில் பௌத்தர்களாக இருந்தனர் என்பது மறக்கப்பட்டாயிற்று.
அரசியல் தாக்கங்களின் விளைவாக, யாழ்ப்பாணத்தில் பௌத்த இடங்களின் கண்டுபிடிப்பானது சிங்களவர்கள் மற்றும் தமிழர்களின் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: NewsIn Asia என்ற இணையத்தளத்தில் 2021-08-08 அன்று ஆங்கிலத்தில் வெளியாகிய இக்கட்டுரையானது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
BY – P.K.Balachandran
தமிழில் – நடராஜா குருபரன்.