வடகொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார்.
பேரழிவிலிருந்து மீள்வது குறித்து விவாதிக்கும் ஆளும் தொழிலாளர் கட்சியின் இராணுவ ஆணையத்தின் கூட்டத்தில், வடகொரிய தலைவர் பங்கேற்காத போதும் மக்களுக்குத் தேவையான பொருட்களை இராணுவம் இந்தப் பகுதியில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கூறியனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்துக்குப் பிறகு 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் சுமார் 5,000பேர் வெளியேற்றப்பட்டதாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வீடுகள் அவற்றின் கூரைகள் வரை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும், கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்யோங்கில் உள்ள சேதமடைந்த பாலங்கள் மற்றும் ரயில் பாதைகளையும் அரசாங்க தொலைக்காட்சி காட்டியது.
நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் முழ்கியிருப்பதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை நாடு நம்பியிருந்தது. ஆனால் தற்போது நிலமை மோசமாகியுள்ளது.
1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வடகொரியா, நாடு தழுவிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30 இலட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.