ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜோன் கிர்பி கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அங்கிருக்கும் எங்கள் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி ஆதரவளிப்போம்” என கூறினார்.
எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒகஸ்ட் இறுதிக்குள் இராணுவம் முழுமையாக திரும்பப் பெறும் என அறிவித்துள்ள நிலையில், அதன்பிறகும் ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு ஜோன் பதிலளிக்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்தங்களாக போரிட்டு வந்த அமெரிக்க துருப்புக்கள் அங்கிருந்து முழுமையாக தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள தலிபான் அமைப்பினர் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர்.
இதனிடையே ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு ஆதரவாக அமெரிக்கா இராணுவம், தலிபான்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.