பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தினால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதனை தொடர்ந்து 4ஆவது நாளாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
குறித்த கூட்டத்தொடர் ஆரம்பமாகிய நாள் முதலே, சபையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகியபோது, இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் இன்றும் 2 அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.