ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மீது தாக்குதல் தொடரும் என தலிபான் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.
நாட்டின் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டுக்கு முன்னே காரொன்றின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்கொலை தாக்குதல், ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தின் முக்கிய நபர்கள் மற்றும் தலைவர்களுக்கு எதிரான பழிவாங்கலின் ஆரம்பம் எனவும் முஜாஹித் ட்வீட் செய்துள்ளார்.
அண்மையில் காபூலில் உள்ள பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிஸ்மில்லா முகமதியின் இல்லத்தின் அருகே கார் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒரு பெண் உட்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் தனது குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும் எவருக்கும் எந்ததொரு பாதிப்பும் இல்லை எனவும் அமைச்சர் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதேவேளை பாதுகாப்புத் துறை அமைச்சர் பிஸ்மில்லா முகமதிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வெடிப்பு நடந்தபோது அங்கு யாரும் இல்லை என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் கடும் மோதல்களுக்கு இடையே இந்த வெடி குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் வன்முறைகள் அதிகரித்துள்ளன.