மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் குறைந்தது 21பேர் உயிரிழந்துள்ளதாக, சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் வரலாறு காணாத மழையால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹூபெய்யில் கனமழையால் மின்வெட்டு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன மற்றும் கிட்டத்தட்ட 6,000 மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
நீர்த்தேக்கங்கள் ஆபத்தான அளவை எட்டியுள்ளதாக மாகாணத்தின் அவசர மேலாண்மை பணியகம் தெரிவித்துள்ளது.
ஹூபெய் மாகாணத்தில் கடந்த இரு தினங்களாக 503 மி.மீ. மழை பெய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
வியாழக்கிழமை 480 மில்லிமீட்டர் (சுமார் 19 அங்குலம்) மழை பதிவாகியிருக்கும் யிச்செங்கில் கிட்டத்தட்ட இடுப்பு நிலைக்கு உயர்ந்துள்ள தண்ணீரில், குடும்பங்கள் அலைவதையும் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதையும் சமூகஊடாக புகைப்படங்கள் காட்டின.
’20 அல்லது 30 ஆண்டுகளில் இவ்வளவு மழையை நாங்கள் பார்த்ததில்லை’ என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் பெய்த கனமழையால் சுமார் 100,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஷாங்காய் உள்ளிட்ட யாங்சே ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலையில், அடுத்த வாரம் வரை கனமழை நீடிக்கும் என்று சீன வானிலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.