கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீபவானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் சில பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் மாத்திரமே மின்சாரம் ஊடாக சடலங்களை தகனம் செய்யும் வசதி இருக்கின்றது.
அதாவது ஒரு நாளைக்கு நான்கு பேரை மாத்திரமே மின்தகனம் செய்யக்கூடிய வசதி இருக்கின்றது.
மேலும், யாழ்.போதனா வைத்தியசாலையிலும் சரி ஏனைய வைத்தியசாலைகளிலும் சரி கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அங்குதான் கொண்டு செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது.
கடந்த ஐந்து மாதங்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 140 பேரும் ஏனைய வைத்தியசாலைகளில் 16 பேருமாக மொத்தமாக 156 பேரை மின்தகனத்திற்கு அனுப்ப வேண்டி இருந்தபடியால் இன்னும் பல பேரின் சடலங்கள் தேங்கி இருக்கின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.