கிட்டதட்ட ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதி முழுவதும் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடத்த மோதல்களில் பொது மக்கள் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வன்முறைகளுக்கு பயந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். கிட்டதட்ட இந்த வாரம் மட்டும் 72 ஆயிரம் குழந்தைகள் அடைக்கலம் தேடி தலைநகர் காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதில் பலர் வீதிகளில் உறங்குவதாக ‘சேவ் தி சில்ரன்’ என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
இதனிடையே, ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை, தலிபான்கள் கைப்பற்றியுள்ளமை ஆப்கான் அரசாங்கத்துக்கு பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது.
ஏற்கனவே ஹேரட், காசினி போன்ற நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது கந்தஹார் நகரையும் கைப்பற்றியுள்ளது.
கந்தஹார் நகரம் முன்னொரு காலத்தில் தலிபான்களின் வலுவான கோட்டையாக திகழ்ந்தது. மேலும் முக்கிய வணிக சந்திப்பாக இருப்பதால் தந்திரோபாய ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாகவும் இந்நகரம் உள்ளது.