ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா அந்நாட்டில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடனான உறவை இந்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வந்தது.
அந்நாட்டில் ஏராளமான முதலீடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அணைகள், சாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றம், கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஆகியவையும் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படன. அதேநேரம் ஆப்கானிஸ்தானுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் ஈரானில் சாப்ஹர் துறைமுகத்தையும் இந்திய அரசு கட்டமைத்து வந்தது.
தற்போது ஆப்கானின் ஆட்சியதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய அரசு மேற்கொண்டுள்ள முதலீடுகள் கேள்விக்குறியாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.