வடக்கு டில்லியில், இரும்பு பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், யாசகம் எடுத்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வடக்கு டில்லியின் ரூப்நகர் பகுதியில், 60 அடி நீளத்திற்கு, 50 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலம் ஒன்று இருந்தது.
அதன் கீழ் தண்ணீர் ஓடை சென்று கொண்டிருந்ததால், அதை கடக்க அந்த பாலத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
நேற்று காலை, 9:30 மணிக்கு அந்த இரும்பு பாலம் திடீரென உடைந்து, உட்புறமாக விழுந்தது.
இதில், யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்த, 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் ஓடை நீரில் விழுந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர், டில்லி பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதியில் இருந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
அந்த பகுதியை சுற்றிலும் தடையை ஏற்படுத்திய டில்லி பொலிஸார் , மக்கள் யாரும் அதன் அருகில் செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர்.
அந்த இரும்பு பாலம் திடீரென உடைந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.
எனினும், 50 ஆண்டுகள் மட்டுமே பழமையான அந்த பாலம், திடீரென உடைந்து விழுந்ததன் பின்னணியில் நாசக்கார செயல்கள் ஏதும் இருக்குமா என பொலிஸார் விசாரிக்கின்றனர்.
காலை 9:30 மணிக்கு முன்னதாக, காலை நேரத்தில் விபத்து நடந்திருந்தால், அந்த வழியாக ஏராளமான பாடசாலை குழந்தைகள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் பள்ளிக்கு சென்ற படி இருப்பர்.
அந்த நேரத்தில், பாலம் இடிந்து விழுந்திருந்தால், பாதிப்பு அதிகமாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கூறினர்.











